Ads 468x60px

Featured Posts

Sunday, July 27, 2014

அறிவிப்பு

அறிவிப்பு 

நந்தலாலா.காம் இதழ்-019 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் "நந்தலாலா.காம்" இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
-ஆசிரியர்

Saturday, June 14, 2014

01) நந்தலாலா - 018 (ஆனி-2014)

நந்தலாலா - 018
ஆனி - 2014
ஓவியம்: செந்தில்பாலா, செஞ்சி

இதழ் - 018

01) முகப்பு.


அடுத்த இதழ்-19  வெளியாகும் நாள்: 20 / 07 / 2014

படைப்புகளை அனுப்பக் கடைசி நாள்: 12 / 07 / 2014

02) தனியே பயணிக்கும் ஒருவன்!


தனங்கள் பட்டுவிடாமல்
பின்சாய்ந்து
மகன் பின்னால் உட்கார்ந்திருக்கிறாள்
திருநீறணிந்த அம்மா
இருசக்கர வாகன பயணத்தில்

வெயில் உறிஞ்சி
மீந்த உடலுடன்
மனைவியை, பிள்ளைகளை
தன்
முச்சக்கர வாகனத்தில்
முன் அமரவைத்து
முன்னிரவில் வீடேகுகிறான்
இளநீர் வியாபாரி

குல்ஃபி விற்கும் சிறுவன்
தினமிரவு தன் வண்டியில்
பசியையும், உணவையும்
பிளாஸ்டிக் குண்டானில்
வைத்தபடிதான் விற்கிறான்

எப்படியோ லபித்துவிட்ட
மொபெட்டின்
பின்னிருக்கையில் அமர
யாருமற்ற ஒருவன்
இவையனைத்தையும்
துக்கத்துடனே பார்க்கிறான்

எப்போதும்
விட்டுச் சென்றுவிட்ட பேருந்தை
பிடிக்க விழையும் ஒருவனை,
கவிழ்ந்த கட்டைவிரல் காட்டும்
பள்ளிச் சிறுவனை,
கனத்த பையுடன் நடக்கும்
தந்தையொத்த ஒருவனை,
வலிய வண்டியேற்றி
இறக்கிவிடும் அவன்
எதிர்பார்ப்பதெல்லாம்
நன்றியென்ற ஒற்றைச் சொல்லல்ல..

கண்வழி பெருகிவரும்
பிரியமெனும் நதியையோ
அல்லது
தோளில் கைவைத்து
நாளை வருவாயா
என்னும்
உறவுக்கான அழைப்பையோ மட்டும்தான்..
-நந்தன் ஸ்ரீதரன்,
சென்னை.
9884744430

03) துரத்தும் நினைவின் தொடர்பு எல்லை

*
வாவென்று சொல்ல முடியா சந்திப்பிற்கான 
அழைப்பைத் துண்டிக்கும்
 
முன்
 
விழுங்கிய எச்சில் விஷத்தில் 
நினைவு தப்பியிருக்கலாம்
தவிர்ப்பதாய் சொல்லிய முனை 
பதம் பார்த்த வார்த்தை ஈட்டியின் 
கூர் பற்றி
எழுதும் பென்சில் உணர்த்த
ஒன்றன் பின் ஒன்றாய் எழுதிய 
நினைவு சொற்களை
மழை  திருத்தி
சுயத்தின் வெயில்
உலர விடுகையில்
புறங்கை வழியாய் ஒழுகியோடும் 
சொல்லொன்றில் திறந்துகொள்கிறாய்
 
போவென்று சொல்லமுடியா அகாலத்தின் 
இருளறைக்கு துளி வெளிச்சமாகிறது
 
துண்டிக்கப்பட்ட அழைப்பின்
 
ரத்தச் சிவப்பு
***
-ரேவா
revaviews@gmail.com

04) காலடியில்...

காலடியில் ...


காரியம் சாதிக்க நடக்கும்
பெருந் தொகைப் பேரம்;
கூட்டாளியை கவிழ்க்கத் துடிக்கும்
அரசியல் துரோகம்;
விபத்தில் இறந்த நண்பனின்
மரணத்தைச் சொல்லும் சோகம்;
மாலை நேரம் சந்திக்க அழைக்கும்
காதலின் வேகம்;
தன் துணை வீட்டில் இருக்க
பிறன் மனை விழையும் காமம்;
நினைத்ததை முடித்தவன் குரலில்
மகிழ்ச்சியின் நெகிழ்ச்சி….

காலடியில் கடந்து செல்லுமிந்த
உணர்வுகளின் தன்மையெதும் அறியாது
அமர்ந்திருக்கும் கோபுரத்தின்
கதிர் வீச்சின் அபாயத்தையும் உணராது
தன்  துணைக்காக காத்திருக்கும்
ஒற்றைப் பறவை!
-சுப்ரா,
திருநெல்வேலி.
9442328085

05) இலைகளற்ற மரத்தின் நிஜ உருவம்!

இலைகளற்ற மரத்தின் நிஜ உருவம்-2
(கவிதை குறித்தும் கவிதைகுறித்தது குறித்தும்)

 02)
கவிதைக்கு மொழி அவசியமா, மொழிக்கு கவிதை அவசியமா என்ற கேள்வி அடிக்கடி எழுந்துகொண்டிருக்கிறது. கவிதைக்கு மொழி அவசியம் என்பதைத்தாண்டி மொழிக்குத்தான் கவிதை அவசியம் என்ற முடிவுக்கு அடிக்கடி வந்துவிடுகிறேன். அதில் உண்மையும் இருப்பதாக தருக்க ரீதியிலான கருத்தேற்றம் எனக்குள்ளாக ஏறி இருக்கிறது.

கவிதை, மொழியைக் கடந்ததாக  இருக்கிறது. கவிதை ஒரு கலை அல்ல; அது ஓர் உணர்வு என்று தேவதேவன் ஒரு இடத்தில் சொன்னதாக ஞாபகம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவங்களில் கவிதை தன்னைக் காட்டிக்கொண்டுதானிருக்கிறது. கவிதையை அதாவது கவிதையுணர்வை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக புரிந்து கொண்டவர்களாகத்தான் மனிதசமூகம் கடந்து வந்திருக்கிறது. அல்லது கவிதையுணர்வை பிறருக்கு உணர்த்த முற்பட்டு ஒவ்வொரு தன்மையில் வெளிப்பட்டிருப்பதன் தொகுப்புதான் இதுவரை நமக்கு கிடைத்திருக்கும் கவிதைகுறித்தான புரிதல் என்றும் தோன்றுகிறது.

கவிதையுணர்வையேற்றிக்கொண்ட ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ரசாவாதம் நிகழ்ந்திருக்கிறது. அவரவரின் வாகுக்கேற்ப ரசாயனமாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது கவிதையுணர்வு. கவிதையுணர்வு என்ற ரசமேறி ஊறியவர்கள் தன் கண்முன் நிகழ்கிற அல்லது தனக்கு நேருகிற அனேக எதிர்கொள்ளல்களை அந்த ரசவாதத்தன்மையோடு சிலாகிக்கிறவர்களாக, ரசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அதைப் பகிரத்தான் மொழி தேவைப்படுகிறது. தான் சிலாகித்த அல்லது தனக்குள் ஏற்பட்ட தரிசனத்தை, ரசாயன மாற்றத்தை அதேதன்மையோடு எதிரில் இருப்பவருக்கும் உணர்த்தத்தான் மொழி ஆளுமையை செறிவான அழகியலோடு பயன்படுத்தப்படுகிறார்கள். அந்த மொழியாளுகைக்குத்தான் மொழியின் செழுமை, மொழியின் செறிவு பேருதவி செய்கிறது.

பாத்திரம் இல்லாமல் சமைக்க முடியாததைப்போல மொழியில்லாமல் கவிதையாக்கமும் முடியாததுதான். பாத்திரவாகு, பாத்திரவளமை, பழவியபாத்திரம் என்பதெல்லாம் சமையலுக்கான பக்கபலமேயொழிய பாத்திரங்களே சமையலாகாது என்பதே அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு. சமையல் ருசியை நேர்த்தியாக பாத்திரங்களை கையாண்டு பரிமாற, சுவைஞர்களில் சிலர் பாத்திரங்களை கையாண்டதின் விதத்தில்தான் அந்த ருசியிருப்பதாய் ஏற்றிக்கொண்டு பாத்திரங்களைக் கையாளும் அழகியல் யுக்திகளில் ஆளுமையைப் பெருக்கி அவ்வழகியல் ருசியை சமையல் ருசி என்று அழகிய காலிப்பாத்திரங்களை கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

பாத்திர ருசி கொடுக்கிறவர்களுக்கு மத்தியில் பாத்திரத்திற்குள்ளான சமையலின் ருசியை கொடுக்கிறவர்களை கண்டடைவது சவாலானதாகிவிடுகிறது. பயிற்சி, பழக்கத்தின் மூலம்தான் இப்போலிமைகளை அடையாளம் கண்டு உண்மையான கவிதையுணர்வை கண்டடைய வேண்டியிருக்கிறது.

பொதுவாக கலையுணர்வு உடையவர்களால் மட்டுமே கலையை கண்டடைய முடியும். மற்றவர்கள் கலையை விரயமாக மட்டுமே பார்க்க முடியும். ஆக, கலை என்பது ஒரு வகை சமிக்ஞை, ஒரு வகை ஆயுதம்/கருவி. மனித மனநிலையை அறியச்செய்யும் தன்மைக்காட்டியும்கூட. மொழி ஆளுமை என்பது ஒரு கலை.

கவிதையை அடைய அதாவது கவிதையுணர்வை அடைய இட்டுச்செல்லும் ஒன்றாக மொழி ஆளுமை என்ற இந்த கலை இருக்கிறது.

மொழி வளர்ச்சி என்பதும், மொழியின் செழுமை என்பதும் அந்த மொழியில் நிகழ்த்தப்படும் படைப்புகளின் மதிப்பீடுகளால்தான் நிகழ்கிறது. பரிசோதனைகளோடும், பதிவுகளோடும் படைப்புகள் பெருக பெருக மொழி வளர்ச்சி என்பதும் சாத்தியப்படும். இந்தப்படைப்புகள் காலந்தோறும் நிகழ்த்தப்படும்போதுதான் ஒரு மொழி காலத்தால் நகர்த்தப்படும். ஒருவேளை குறிப்பிட்ட காலத்தில் மொழியில் எந்தபடைப்பும் வரவில்லையெனில் மொழி  அதற்கு முந்தைய காலத்தோடு நின்று பழம்பெருமைகளையே மீண்டும் மீண்டும் அறைக்கப்படும் ஒன்றாக மாறித் தேங்கிவிடும்.

ஆக, மொழி படைப்பாளியை வளர்க்கிறது, வளர்த்தது என்று சொல்வதும், சொல்லுபவர்களும் பாத்திரருசியைக் காட்டி காலிப்பாத்திரங்களில் பலனடைந்தவர்களாக இருப்பார்கள். ஒரு படைப்பாளியின் பதிவுகளால்தான் மொழி வளர்கிறது. மொழிக்குதான் படைப்பாளி அவசியம். படைப்பாளிதான் மொழியை வளர்க்கிறான்.

இங்கு கவிதைகுறித்து பேசுவதால், மொழி அழகியலோடு கவிதை என்று எழுதுகிறவர்களின் படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யும்போது அடிபட்டுப் போகிறார்கள். அம்மொழியைக் கடந்து அவர்களது புலமையை கடத்த முடியாமல் போகிறது. கவிதையுணர்வோடு கவிதை எழுதுகிறவர்களின் படைப்புகள் எந்த மொழியிலும் மொழிபெயர்த்து அதே கவிதையுணர்வை மொழியைக் கடந்தும் கடத்த முடிகிறது.

இந்த இடத்தில் இது குறித்தும் பேச வேண்டும். கவிதையுணர்வு எந்த மொழியிலும் பெயர்க்கமுடியும் என்பதால், எல்லாமொழியைப் போலவே பேச்சுநடை, எழுத்துநடை என்று இரு வடிவங்களில் தமிழ்மொழி இருக்கிறது. இங்கு வட்டார வழக்குகள் என்ற முறையில் ஒருபுறமும், சமூகம் சார்ந்தும், சமூக மதிப்பீடுகள் சார்ந்தும் பேச்சுநடை பல வகைமைகளில் இருக்கின்றன. ஒரு மொழி, கவிதைகளாலும் கட்டமைக்கப்பட்டது, படுகிறது என்றால், கவிதைக்கும் மொழியின் வளமையில் பங்குண்டு என்றால் அந்த கவிதையுணர்வை பேச்சுமொழி வழக்கிலும் பதியப்படவேண்டிய அவசியமிருக்கிறது.

எந்த மண்ணில் கவிதையுணர்வு சிலாகிக்கப்பட்டதோ, அதே மண்வாசத்தோடு புழக்கத்திலுள்ள  பேச்சுமொழியில் அதே கவிதையுணர்வு பெயர்த்துக் கொடுப்பதும் மொழிச்செறிவாக்கம்தான்.

எந்த மொழி பொதுசமூகத்தில் பேசப்படுவதற்கு அச்சப்பட்டுக் கிடந்ததோ, அதோடு எந்தவாழ்வு சொல்லக் கூசிக்கிடந்ததோ அது சமூக வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை அப்படி பதியப்படாமல் போனால் அது மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அநீதியாகப் போய்விடும்.

இங்கு இந்த கருத்தும் முன்வைக்கப்பட வேண்டுமென நினைக்கிறேன். அதாவது தலீத் சமூகத்தினரால் எழுதப்படும் மொழி தலீத்மொழியாகவும், பிற சமூகத்தினரால் எழுதப்படுகிறபோது அதேமொழி வட்டாரவழக்காக பார்க்கிற மனநிலை படிப்புச்சமூகத்தில் உலவுகிறது. நாட்டார்வழக்குகளை கையிலெடுத்து வேர்ச்சொல் ஆராயும் அதே அளவு முக்கியத்துவம் தலீத் மொழிக்கு கொடுக்காததும் கேலிக்கூத்தானது.

சரி எல்லாமே மொழிக்கு கூடுதல் அணிகள்தான். என்றாலும் ஒரு மொழியில் நிகழ்த்தப்படும் எந்த மொழிதலிலும் கவிதையுணர்வுடன்கூடிய கவிதைகளை கண்டடைவதே கவிதைகளை கண்டடைதலாகும்.

“எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதை விடமாட்டேன்” –ஞானக்கூத்தன்

(தொடர்ந்து பேசுவோம்) 

06) தூங்க முடியவில்லை!

 
தூங்கவே முடியவில்லை
அப்பாவின்
குரட்டைச் சத்தமில்லாமல்!
அப்பாவுக்கென்ன
சிரித்துக் கொண்டிருக்கிறார்
புகைப்படத்தில்..
மஞ்சள் குங்குமத்தோடு!

அப்பாவுக்குப் பழக்கிப்
போடவைத்த கையெழுத்து தான்
என் ஒரே ஆட்டோகிராப்...
அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறது
இந்த அறையில்!

தூக்கம் வருவதற்குள்
அப்பா வந்து விடுகிறார்
நினைவில்..

பேருந்தில் தூங்கிச் சாயும்
முன்பின் தெரியாத ஆளுக்கெல்லாம்
தோள் கொடுத்தார் அப்பா

அப்பாவின் TVS50யில்
நெரிசல் அடங்கிய இடம் வந்ததும்
என்முகம் தெரிய
கண்ணாடியைத் திருப்பிவிட்டு
சிரிக்கச் சொல்லுவார்

தூங்கிக் கொண்டிருந்த
அப்பாவை எழுப்பி
“குரட்டை விடாதப்பா,
தூங்க முடில” என்றது
நியாபகம் வருகிறது
கூடவே கண்ணீரும்...
அப்பா சிரித்துக் கொண்டிருக்கிறார்...........!
-ஜெயகாந்தன்.பொ,
ஆரணி.
9489333399
 
தொடர்ந்து வாசிக்க older posts-ஐ அழுத்தவும்!